Tuesday 18 October 2011

சாலை விபத்து


சாலையில் செல்லும் வாகனங்களைக் கணக்கிட்டுக் கொண்டே தன் பயணத்தை தொடர்ந்தான் விவேக். சாலை நீளத்திற்கு வாகனமும் நீண்டு கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தான், வாகனங்கள் வரிசையாக அணிவகுத்துக் கொண்டேயிருந்தன ஒழிய, எதுவும் முன்னேற வில்லை. யோசித்தபடியே சாலையின் ஓரத்தில் வேகமாக நடந்தான் விவேக்.

சில ஆயிரத்தில் வாங்கியதும், சில லட்சத்தில் வாங்கியதும், ஒன்றாய் வரிசையிட்டு நின்றது. உலகில் சமத்துவம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் சரியாக அதை பயன்படுத்தவில்லை என்று சிந்தித்தப்படியே வந்துவிட்டான் விவேக் அந்த வண்டிகளின்  முன்னால். அவசரமாய் வந்தவனுக்கு அவசரமாய் தீர்ப்பு எழுதப் பட்டிருந்தது. ரத்தம் உள்ளே மட்டும் ஓடவில்லை, வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் பார்க்க தான் மிகவும் கோரமாய் இருந்தது. பைக்கில் அடிபட்டு கிடந்தவனைத் தூக்க யாரும் வரவில்லை. அவனுக்கும் முடியவில்லை தன்னை தூக்கி நிறுத்த, என்ன செய்வது வாழ்க்கை சில நேரம் அனைத்திற்கும் துணையினைத் தேடச் சொல்கிறது.

கூட்டம் மொய்த்த அளவிற்கு, அங்கு ஈ மொய்க்கவில்லை. ரத்தம் ஆறாய் ஓடுவதைப் பார்த்து, விவேக் வேகமாக அந்த பைக்கினையும், அந்த நபரையும் தூக்க எத்தனித்தான். எப்போதும் யோசனைச் சொல்ல ஆயிரம் பேர் வருவர், யோசித்து செயல்பட ஒருவரும் வரமாட்டார்கள். "ஏய் தம்பி, இது போலீஸ் கேசு, கொஞ்சம் பொறுப்பா, என்னமோ ரொம்ப வேகமா வந்துட்ட" என்றார் ஒருவர், தலையாட்டும் மந்தையாடுகளாய் அதனை வழிமொழிந்தனர் ஒரு சிலர். ஈரம் சிலருக்கு இருக்கத் தான் செய்கிறது, "தம்பி, நீ தூக்கு பா, இப்ப கோர்ட்டே சொல்லியிருக்கு முதலுதவி செய்ய" என்று சொல்லியபடியே இருவர் வந்தனர்.

ஒரு சில நொடிகளில், அந்த இடம் பொது கூட்டம் ஆனது. நல் உள்ளங்கள் சில, சீக்கிரமாய் அவனை அவன் பைக்கிலிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய உதவினர். அவன் மயக்கத்தில் மூழ்கும் சில நொடிகளுக்கு முன்னால் விவேக்கிற்கு தன் கண்ணாலே நன்றி சொன்னான். ஒரு பைக் விபத்தில் ஒரு கையிழந்த மாற்றுத் திறனாளியான விவேக்கிற்கு தெரியாதா அவனின் வேதனையும், சோகமும். அன்று பைக் விபத்தில் காலத் தாமத்தால் கையிழந்திருந்தான் விவேக், நம்பிக்கை இழக்காமல்...

நாணயம்...

அதுவும் சரி தான், என்று எண்ணியபடியே வெளியில் வந்தார் சதாசிவம். எத்தனை முறை கேட்டும் சில்லறை தரமறுக்கிறார்கள் வங்கியில், கேட்டால் எதாவது காரணம் சொல்கிறார்கள். பேசாமல் எதாவது கோயில்களில் கேட்டு பார்க்கலாம் என்று தனக்குள் எண்ணியபடி வெளியே வந்து வேகமாக நடையைக் கட்டினார் சதாசிவம்.

இது தினசரி நடைமுறை தான், இருந்தும் இன்று மிகவும் அலைகழிக்கப்பட்டார் சதாசிவம் வங்கியில். அது அவரை மிகவும் பாதித்தது. ஒரு காலத்தில் இப்போது மாதிரியெல்லாம் இல்லை, சில்லறைப் புழக்கம் அதிகமாக இருந்தது. ஏன் இப்படி ஆயிற்று எண்ணிக் கொண்டே கோயிலினை அடைந்து விட்டார் சதாசிவம்.

நல்ல வேளை சாமி இருக்கிறார் என்றபடியே, "சாமி வணக்கம், நல்லா இருக்கீங்களா" என்று கேட்டார் சதாசிவம். அந்த சாமியும் சாமி அருகில் இருப்பதால் சாமி மாதிரியே சொன்னார், மௌனமாக "ம், ம்ம்" என்று. மௌனமான அவர் பதில் பல சிந்தனைகளைத் தூண்டியது சதாசிவத்திற்கு. எப்போதும் நல்லா பேசும் சாமி ஏன் இன்று இப்படியிருக்கிறார் என்று இருந்தவர்க்கு வந்த வேளை நியாபகம் வந்தது..

"சாமி, சில்லறை கிடைக்குமா?" என்று கேட்டார் சதாசிவம். சாமியும் அன்று வந்ததில் இருந்த சில்லறைகளை எண்ணி கொடுத்தார் ஒரு 100 ரூபாய் தேறியது, அவ்வளவு தான். என்ன செய்வது கோவில் ஊருக்கு நடுவில் இல்லை, ஊரின் எல்லையிலிருக்கிறது, எதாவது விசேஷம் என்றால் தான் சில்லறை கூடும் என்று சொல்லியபடியே சில்லறையினைத் தந்தார் அந்த (ஆ)சாமி.

சில்லறையினைப் பார்த்தார் சதாசிவம், எத்தனையோ முறை பார்த்த அந்த சில்லறை இன்று பல கதைகளைச் சொன்னது. ஒரே வடிவத்தில் 1 ரூபாய், 50 பைசா, 5 ரூபாய். அவசரத்தில் மாற்றிக் கொடுத்து விடுவோமோ என்ற காரணத்தால் நாணயங்கள் எல்லாம் அவர் அவர் வீட்டு உண்டியலில் சேமிப்பாகி போனது, அவசரத்தில் வெளியே வந்தது வியாபாரமாகிப் போனது. ஆம் 100 ரூபாய்க்கு பொடிச் சில்லறை கேட்டால் 95 ரூபாய்க்கு தான் சில்லறை கொடுக்கிறார்கள்...

நாணயங்கள் வடிவத்தில் நாணயங்கள் வியாபாரமாகிவிட்டன, என்ற நொந்த படியே "வரேன் சாமி" என்று வழி நடந்தார் சதாசிவம். நாணயம் சிரித்தது, நாணயங்களின் குலுங்கலில் அவர் பைவழியாக....


Sunday 16 October 2011

முள்ளான வேதனைகள்


எப்படியும் பார்த்து விட வேண்டும், பெயரினைச் சேர்த்து விட வேண்டும் என்று மணிகணக்கில் காத்திருந்தார் ராமசாமி. அவர் ஓய்வு பெற்ற கணக்கு வாத்தியார்.

அன்று எல்லாம் இப்படியில்லை, அவர் கிராமத்தில் வருகிறார் என்றாலே ஊரே அவருக்கு வழி விட்டு வணங்கி செல்லும். அவர் கணக்கு மட்டும் சொல்லித் தரவில்லை, கணக்கு பாடம் மூலம் எளிமையாக வாழ்க்கை கணக்கினையும் விவரித்து எளிமையாய் கற்று தந்ததால் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா மாணவர்களும் கணக்கில் 100 சதவீதம் இல்லாவிட்டாலும், யாரும் தோல்வி அடையாமல் இருந்தது அவருக்கு மிகப் பெரிய பெயர் பள்ளியிலே. அவர் வேலை பார்த்தது ஒரு எளிமையான கிராமத்து நடுநிலைப் பள்ளி. அவர் தன் வறுமை நிலையிலும் கஷ்டப்பட்டு படித்து இந்த பதவிக்கு வந்தவர் என்பதால் அவருக்கு ஒவ்வொரு மாணவனின் குடும்ப சூழ்நிலை தெரிந்து அதன்படி தன்னால் ஆன உதவி செய்தார்.

"யாருப்பா இங்க ராமசாமி, எத்தனை தரம் கூப்பிடறது" என்று ஒரு முறை கூப்பிட்டு, ஒன்பது முறை கூப்பிட்டவன் போல் அந்த பியூன் கத்தி தீர்த்தான், அவரும் தன் மலரும் நினைவிலிருந்து திரும்பி,

"நான் தான் சார், என் பெயர் தான் ராமசாமி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அலுவலர் அறைக்குள் சென்றார். அந்த அலுவலர் வந்தவரை ஏறிட்டு கூட பார்க்காமல் "என்னய்யா வேணும், சும்மா என்னுடைய டைம் வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் சொல்லுயா, வந்துட்டாங்க காலங் காத்தால" என்று சொல்லி விட்டு அவர் தன்னுடைய அலைபேசியில் ஏதோ நம்பர் தேடிக் கொண்டிருந்தார்.

"சார், நான் ரிடையர்ட் கணக்கு வாத்தியார், என் பெயர் ராமசாமி, என் பேரன் பெயர் ரேசன் கார்டுல சேர்க்கனும்" என்று சொல்லி முடிப்பதற்குள், அவரை சட்டை கூட படுத்தாமல், அவர் மனுவினை வாங்கி கொண்டே தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் அந்த அலுவலர். பாவம் ராமசாமி, நேரம் கிட்டதிட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது, வாங்கிய மனுவிற்கும் பதில் சொல்லவில்லை, அவர் இருப்பதா, போவதா என்று தவித்து போனார். பாவம் வயதாகி விட்டதால் அவரால் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லை.

"சார், நான் என்ன பண்ணனும் சார்?" என்று வாய் விட்டு கேட்டும் விட்டார். வந்ததே கோபம் அந்த அலுவலருக்கு, அவரை அப்போது ஏறெடுத்தும் கூட பார்க்காமல், "என்னய்யா இப்ப அவசரம், நான் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்ல, என்னமோ ரொம்ப தான் பண்ற என்று சொல்லியபடி அவரை உற்று நோக்கினான். ஒரு சில விநாடிகளில் அந்த அலுவலர் பதட்டத்தில், "சார் நீங்களா, சார் எப்படி இருக்கீங்க?, என்ன மன்னிக்கனும் சார், ஏதோ அலுவல் டென்சன்ல இப்படி பேசிட்டேன்" என்று கெஞ்சாத குறையாக அவரிடம் வேண்டும் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, ஆவண செய்து தருவதாய் சொல்லி அனுப்பி வைத்தான் அவரின் முன்னால் மாணவன். அந்த நினைவுகளைச் சுமந்தபடி பேரூந்தில் ஏறினார் ராமசாமி.

வேகத்தின் வேகம்


வேகத்தின் வேகம்

அன்றும் எல்லோரும் வேகமாக சென்று கொண்டிருந்தனர். எதையோ தேடி எல்லோர் பயணம் இருப்பது போல் தோன்றினாலும், சிலர் தொலைந்ததை தேடுபவர் போல் மிக வேகமாகச் செல்கின்றனர். நிச்சயம் உலகம் எல்லோருக்கும் புதிராகத் தான் இருக்கிறது, அவனுக்கும் அப்படி தான் இருந்தது. அவன் பார்ப்பதற்கு சினிமா நடிகர் மாதிரி இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு முறை பார்க்கத் தூண்டும் முகம் கொண்டிருந்தான். எல்லோரும் போல் அவனும் வேகமாகச் சென்று கொண்டிருந்தான் அந்த நான்கு வழிச்சாலையில்.

ஒவ்வொரு முறையும் அவன் செல்லும் போது ஏதோ ஒன்று தடங்கலாகவே இருந்து கொண்டிருக்கும், ஒன்று அவன் ஏதோ ஒன்றை மறந்து வந்திருப்பான் இல்லை என்றால் அவன் பார்க்கச் செல்லும் நபர் அவசரமாக வெளியில் சென்றிருப்பார். நிச்சயம் இன்று பார்த்து விட வேண்டும் என்ற நோக்கில் தன் பயணத்தினை விரைவு படுத்தினான். அவன் ஒரு வளைவில் திரும்பி மறுபடியும் நேர்கோட்டிற்கு செல்லும் போது அந்த பேரூந்து அவனை கடந்து சென்றது, அதில் ஒரு மஞ்சள் நிலா அழகாய் பறந்து சென்றது. ஒரு நொடி தான் அவளைப் பார்த்திருப்பான், அந்த அழகு நிச்சயம் அவனை வெகுவாக ஈர்த்தது. மறுபடியும் பார்க்கத் துடிக்கும் அந்த அழகு முகம், அவனை ஒரு சில நொடிகள் நிச்சயம் ஸ்தம்பிக்கச் செய்தது. அதற்குள் பேரூந்து அவனை கடந்து சிறிது தூரம் சென்று விட்டது. அந்த மாலை நேரம், சூழ்நிலை மட்டும் இதமாக்க வில்லை அவன் மனநிலையும் தான்.

தாண்டிச் சென்ற பேரூந்தினைத் தொட்டு விட துடித்தான், தன் பைக்கில் வேகத்தினை அதிகப்படுத்தினான். தொட்டு தொட்டு சென்றது பேரூந்து மட்டுமல்ல அவள் அழகு முகமும் தான். அவளும் நோக்கினாள், அவளுக்கு நிச்சயம் இவன் யார் என்று தெரியாது, ஆனால் அவன் வேகம் அவளை ஒரு சில நொடிகளாவது பார்க்கத் தூண்டியது. ஏதோ சொல்ல நினைத்து அவள் எத்தனிக்கும் முன்னே எல்லாம் முடிந்தது. அவன் வேகமாக தொட்டுச் செல்ல முற்படுகையில் அந்த அதிவேகம் அவனை மட்டுமல்ல அவனின் நினைவுகளையும் சேர்த்து சுமந்து சென்றது. அவன் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் நிலை தடுமாறினான், ஒரு சில நொடிகளில் அவன் பயணித்த சாலை, அவனைச் சுமந்து செல்ல உதவியாய் வழிவிட்டது. வேகம் எதற்குமே தீர்வு இல்லை, விவேகம் இல்லாமல் இருந்தால்.